கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகை கடந்த, 14ல் கொண்டாடப்பட்டது. பொங்கலின் மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினத்தில் குடும்பத்துடன் சுற்றுலாதலங்களுக்கு செல்வதும், கிராம பகுதிகளில் பெண்கள், சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதும் வழக்கம். கொரோனா அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில், காணும் பொங்கல் தினத்தில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் அனைத்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டிகானப்பள்ளி, பெத்ததாளாப்பள்ளி, வெங்கடாபுரம், வேப்பனஹள்ளி, ஒரப்பம், எலத்தகிரி, வள்ளுவர்புரம், கந்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுவர்களுக்கான இசை நாற்காலி, ரொட்டி கவ்வுதல், சாக்கு போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டிகளும் நடந்தது. வள்ளுவர்புரத்தில் நடந்த கோலப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், தெருவில் சாணமிட்டு கழுவி வண்ணப்பொடிகளை கொண்டு அழகிய கோலமிட்டனர். இப்பகுதியில் நடந்த பல்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று மாலை பரிசுகள் வழங்கப்பட்டன.