ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தாசனபுரம் கிராமத்தில், பழமை வாய்ந்த லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த, 2014ல், வி.சி., கட்சி மாவட்ட அமைப்பாளர் சம்பங்கி ராமநாயுடு என்பவர் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டார். அதன் பின், 3 கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டது. 2016ல் கோவில் பணி முடிந்து, தினமும் பூஜைகள் நடந்து வந்தன. இந்நிலையில், தர்மகர்த்தா சம்பங்கிராமநாயுடு மற்றும் கோவில் அர்ச்சகர் இடையே, கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இது கிராம மக்களுக்கு இடையேயான பிரச்னையாக மாறியது. இது தொடர்பாக, பேரிகை போலீசில் தர்மகர்த்தா சம்பங்கிராமநாயுடு நேற்று புகார் செய்தார். இதையடுத்து, இரு தரப்பினரையும் நேற்று போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதில், 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் ஸ்டேஷனில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாசனபுரம் கிராம கோவிலில் வைத்து பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.