ஓசூர்: டில்லி குடியரசு தினவிழா பேரணியில், தமிழக ஊர்தியை புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது,'' என, அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராயக்கோட்டை சாலையிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டுக்குரியவர். ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை, அரசு விழாவாக நடத்த ஆணையிட்டுள்ளார். என் பெரியப்பா என உரிமையோடு அழைத்த அவர், அவருக்கு அரசு விழா எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி பெயரளவில் தமிழ் பேசுகிறாரா என்ற ஐயப்பாடு எழுகிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இரு வரிகளில் தமிழ் பேசுகிறார் பிரதமர் நரேந்திரமோடி. யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொன்ன பாரதியின் கருத்துக்களை ஒப்புக்கொண்டவர் அவர். ஆனால், குடியரசு தினவிழா பேரணியில் தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அதை அனுமதி மறுத்து புறக்கணித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.