அரசுக்கு செலுத்தப்பட்ட ரூ.36 கோடி அபராதம்: எஸ்.ஆர்.சி.எல்., நிறுவனம் விரைவில் இயங்குமா | சேலம் செய்திகள் | Dinamalar
அரசுக்கு செலுத்தப்பட்ட ரூ.36 கோடி அபராதம்: எஸ்.ஆர்.சி.எல்., நிறுவனம் விரைவில் இயங்குமா
Added : ஜன 18, 2022 | |
Advertisement
 

சேலம், 'செயில்' நிறுவனத்தின், துணை நிறுவனமான 'செயில் ரெப்ரேக்டரி (எஸ்.ஆர்.சி.எல்.,) கம்பெனி லிட்., நிறுவனம்' மாமாங்கத்தில் உள்ளது. அதற்கு சொந்தமான திறந்தவெளி சுரங்கம், 1,800 ஏக்கர் பரப்பில், மாமாங்கம் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ளன. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விதிகள் மீறி, சுரங்கத்தில், சேலம் செயில் நிறுவனத்துக்கு மூலப்பொருளான வெள்ளைக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், 2017ல், நிறுவனம், அடுத்து சுரங்கமும் மூடப்பட்டன. இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீடு, 37 கோடி ரூபாயை, தமிழக சுரங்கம் மற்றும் புவியியல்துறை வசூலித்து, மீண்டும் அனுமதியை முறைப்படுத்தி, தீர்வு காணும்படி தெளிவுப்படுத்தியது. அதை, எஸ்.ஆர்.சி.எல்., நிறுவனம் ஏற்க மறுத்து, அபராதம் செலுத்தவில்லை. இது துணை நிறுவனம் என்பதால், மத்திய அரசும் தனி கவனம் செலுத்தவில்லை. அதை சாதகமாக பயன்படுத்தி, எஸ்.ஆர்.சி.எல்., நிர்வாகம், தன்னிச்சையாக கனிம வளங்களை இறக்குமதி செய்து, 'செயில்' நிறுவனத்துக்கு வினியோகம் செய்து வருகிறது.

கள ஆய்வு: அதனால், 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஐந்தாண்டாக வேலை இழந்து பரிதவித்து வருவது குறித்து, தமிழக, பா.ஜ., தரப்பில், மத்திய உருக்குத்துறை அமைச்சருக்கு, தொடர்ந்து புகார்கள் சென்றன. இது தொடர்பாக, இந்திய உருக்கு ஆணையத்திடம், எஸ்.ஆர்.சி.எல்., தொடர்பான கோப்புகள் நிலுவையில் உள்ளதா, அபராதத்தொகை செலுத்தக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா, வெள்ளைக்கற்கள் இறக்குமதி செய்ய அவசியம் என்ன, என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதன் எதிரொலியாக கர்நாடகா மங்களூர், குதிரைமூக்கு அய்யனூர் சுரங்க இயக்குனர் ராமசாமி, கடந்த டிச.,14ல், சேலம் எஸ்.ஆர்.சி.எல்., நிறுவனத்தில், கள ஆய்வு நடத்தினார். அதன் அறிக்கை, உருக்கு அமைச்சருக்கு தாக்கல் செய்து, அவருடன் கலந்தாலோசனை நடத்தினார்.

அபராத தொகை: அதை தொடர்ந்து, செயில் நிறுவன தொழில் நுட்ப இயக்குனர் நந்துராய், டிச.,27 ல், எஸ்.ஆர்.சி.எல்., நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதையடுத்து சட்டீஸ்கர், பிலாய் நிறுவனத்தில் பணியாற்றிய விஷால்சுக்லா, சேலம் எஸ்.ஆர்.சி.எல்., நிறுவன தலைமை பொது மேலாளராக நியமிக்கப்பட்டு, சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரது நடவடிக்கை மூலம், கடந்த, 12ல், சேலம் கனிம வளத்துறையில், அபராதத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. அதில், 36 கோடியே, 76 லட்சத்து, 61 ஆயிரத்து, 452 ரூபாய்கான தொகை, காசோலையாக வழங்கப்பட்டுள்ளதாக, கனிமவளத்துறையினர் தெரிவித்தனர்.

தடையில்லா சான்று? தொழிலாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறுகையில், ''தமிழக அரசு, தன் தரப்பு பணிகளை விரைவுப்படுத்தி, தடையில்லா சான்று வழங்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் நிறுவனத்தை இயக்கிட, உருக்கு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். மத்திய அரசு வழக்கறிஞர் நாச்சிமுத்துராஜா கூறுகையில், ''மத்திய அரசின், துரித நடவடிக்கையால், தண்டத்தொகை செலுத்தி விட்டதால், அதே வேகத்தில், தடையில்லா சான்று வழங்கி, நிறுவனம் இயக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X