ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை, 9:30 மணியளவில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது. வாடிவாசலுக்கு கொண்டு வந்த கோவில் காளைகள் மீது, பூக்கள் தூவி சேலம் கலெக்டர் கார்மேகம் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 600 காளைகளை கொண்டு வந்தனர்; கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, 568 காளைகளுக்கு தகுதி சான்று வழங்கினர். மாடுகளை பிடிக்க, 270 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதலில் ஊர் காளைகளை, வாடிவாசல் வழியாக அனுப்பினர். தொடர்ந்து சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, கூடமலை, கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை பகுதிகளை சேர்ந்த, 568 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றின் திமிலை பிடித்து வீரர்கள் பரிசு பெற்றனர். பல வீரர்களை, முரட்டுக்காளைகள் தூக்கி மைதானத்தில் வீசியது. பிரிட்ஜ், பாத்திரம், சேர், டேபிள், குத்துவிளக்கு, வேட்டி, வெள்ளி காசு மற்றும் 1,000 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டன. இரண்டு சிறுமியர் உள்பட ஐந்து பெண்கள், காளையை வாடிவாசலில் அவிழ்த்துவிட்டனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சில காளைகள், வீரர்களை நெருங்க விடாமல் மிரட்டியதால் பாதுகாப்பு கட்டைகள் மீது ஏறி தஞ்சமடைந்தனர். சில வீரர்களை, சீறிப்பாய்ந்த காளைகள் பந்தாடி சென்றது. மாலை, 4:30 மணிக்கு விழா முடிந்தது.
காளை உரிமையாளர்கள் தம்மம்பட்டி பிரபாகரன், 25, சிவலிங்கம், 24, பார்வையாளர்கள் கள்ளக்குறிச்சி ரஞ்சித்குமார், 12, பழனியாபுரி ரஞ்சித்குமார், 19, வீரர்கள் திருச்சி சமயபுரம் பிரபாகரன், 25, பெரம்பலூர் சிவலிங்கம், 24, உள்பட, 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொண்டயம்பள்ளி பிரபாகரன், 26, மங்களபுரம் குமார், 38 உள்பட, 46 பேர் லேசான காயமடைந்தனர்.கிணற்றில் விழுந்த காளை மீட்பு: கூலமேடு ஜல்லிக்கட்டு நடந்த இடத்தின் அருகில், 100 மீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு வேலி இல்லாததால், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை, 20 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்தது. ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், காளையை மீட்டனர்.
* கால்நடை வாரியம் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழு தலைவர் மிட்டல் தலைமையிலான குழுவினர், கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட வந்தனர். அப்போது வீரர்கள், பார்வையாளர்களை மது அருந்தியது குறித்து பரிசோதனை செய்யாதது குறித்து, போலீசாரை எச்சரிக்கை செய்தனர். கொரோனா நடத்தை விதிகள் மீறி, அதிகளவில் மக்கள் பங்கேற்றது, விதி மீறல் குறித்து வருவாய்த்துறை, போலீசாரிடம் விசாரித்தனர்.