கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னுார் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை மக்களை உஷார்படுத்தி வருகின்றனர்.வீடு, வீடாக சென்று தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், தொற்று அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டுவர, சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஏ.கே.எஸ்., நகர், ராஜேந்திரா நகர், ராஜேந்திரா நகர் எக்ஸ்டென்ஷன் ஆகியன தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதார துறையினர் கூறியதாவது: 'ஒரு பகுதியில் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தால், அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவருக்கும் தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தால், அவர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் ஆகியவை குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அரசு எடுத்து வரும் அனைத்து தடுப்பு நடவடிக்கைளுக்கும், முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றனர். பெரியநாயக்கன்பாளையகட்டுப்பாட்டு அறையில், 24 மணி நேரமும் ஆட்கள் பணியில் உள்ளனர்.தினசரி தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டவுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க, அந்தந்த வட்டாரத்திலுள்ள மருத்துவ அலுவலர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படுகிறது.மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் அதிகம் சந்திக்கும் இடங்களிலும், கிராமங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
நேற்று காரமடை ஒன்றியத்தில் உள்ள காரமடை, சிறுமுகை, இரும்பறை, சின்னகள்ளிபட்டி, சீளியூர் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 424 பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு பரிசோதனை செய்ததில், காரமடை போலீஸ் ஸ்டேஷனில், ஒரு ஏட்டு, மருதூர் ஊராட்சி கே.எஸ்.பி, கார்டனில், 11 பேர் என மொத்தம், 47 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.
அன்னுார் அன்னூர் பேரூராட்சியில், ஆறு பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. கஞ்சப்பள்ளி, குப்பேபாளையம், ஒட்டர்பாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில், 17 பேருக்கு என, 23 பேருக்கு தொற்று உறுதியானது.கஞ்சப்பள்ளி, குன்னத்தூர், மாணிக்கம்பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் ஒரே வீதியில் மூன்று பேருக்கு மேல் தொற்று உறுதியானதால் அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, நடமாட தடை விதிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ளோர் வெளியில் செல்வதற்கும், வெளியில் உள்ளோர் அப்பகுதியில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், கோவில்பாளையம் பேரூராட்சியில், ஆறு பேருக்கும், இடிகரை பேரூராட்சியில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.கொண்டையம் பாளையம் ஊராட்சியில் மூவருக்கு, கீரணத்தம் ஊராட்சியில் இருவருக்கு, வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம் ஊராட்சிகளில் தலா ஒருவருக்கு என 14 பேருக்கு தொற்று உறுதியானது. அன்னூர் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அன்னூர், அல்லி குளத்தில் தனியார் பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி கடந்த 4 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று, 150 படுக்கைகள் போடப்பட்டன. இதையடுத்து வாட்டர் ஹீட்டர், தடுப்பு அமைத்தல், தனி அறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நேற்று நடந்தன.இப்பணிகளை கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை வேகப்படுத்தும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வில், தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சங்கர்லால், வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.- நமது நிருபர் குழு -