பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., திறந்து வைத்த கிராமிய நூற்பு நிலையம் புதர்களால் சூழப்பட்டு கிடைக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவனூர் பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் கிராமிய நூற்பு நிலையத்தை காந்தி பிறந்தநாளில், 1985ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., திறந்துவைத்தார்.இங்கு ராட்டையை கொண்டு நூல் உற்பத்தி செய்து விற்பனை செய்ய பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் சிறிது நாட்கள் மட்டுமே செயல்பட்டது. பின்னர், படிப்படியாக அத்திட்டம் செயல் இழந்து, இப்போது நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பழுதான மோட்டார், குடிநீர் குழாய்கள், மின்சார ஒயர்கள் உள்ளிட்ட பழைய சாமான்கள் போட்டு வைக்கும் குடோன் ஆக மாறிவிட்டது. கட்டடம் அடிக்கடி திறக்கப்படாததால் கட்டடத்தை சுற்றியும் செடி, கொடிகள், புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதுகுறித்து, நாயக்கன் பாளையம் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில்,' இக்கட்டடத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மோட்டார் உள்ளிட்ட பழுதான, பழைய தளவாட சாமான்கள் கிடைக்கின்றன. இங்கு கொட்டிக் கிடக்கும் பொருட்களை ஏலம் விட்டு தூய்மை செய்த பின்னர், கட்டிடத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாம்' என்றனர்.