கோவை:நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, கோவை மாநகராட்சி, ரூ.1.64 கோடி மதிப்பிலான, 8 பணிகளை ரத்து செய்திருக்கிறது.கோவை மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலமாக வார்டு பகுதியில் ரோடு போடுதல், மழை நீர் வடிகால் கட்டுதல், பூங்கா அமைத்தல், தெருவிளக்கு பராமரித்தல், போர்வெல் தண்ணீர் சப்ளை செய்தல் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.
இதுவரை செய்த பணிகளுக்கு தொகை வழங்கக்கோரி, ஒப்பந்ததாரர்கள் பில் சமர்ப்பித்த வகையில், 240 கோடி ரூபாய் வரை, மாநகராட்சி கொடுக்க முடியாமல் நிலுவை வைத்திருக்கிறது.பணிகள் ரத்து!நிதி பற்றாக்குறையால் தடுமாறும் மாநகராட்சி, இதற்கு முன் டெண்டர் கோரப்பட்டு, துவங்கப்படாமல் இருக்கும் பணிகளை கண்டறிந்து, ரத்து செய்து வருகிறது.இதற்கு முன், ரூ.98.19 கோடி மதிப்பிலான, 396 பணிகள், ரூ.38.93 கோடி மதிப்பிலான 198 பணிகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின், ரூ.15 கோடி மற்றும் ரூ.6 கோடிக்கான வேலைகள் கண்டறியப்பட்டு, அவற்றையும் கமிஷனர் ராஜகோபால் ரத்து செய்தார்.
இப்போது, தெற்கு மண்டலம், 86வது வார்டு, ரோஸ் கார்டன் மற்றும் எக்ஸ்டன்ஷன் பகுதியில். பாதாள சாக்கடை சேம்பர் உயர்த்திக் கட்டுதல், அல்-அமீன் காலனி, சாரமேடு மெயின் ரோடு, சவுகார் நகர், பாரத் நகர், பிலால் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில், 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்தல், புல்லுக்காடு ரோடு, திப்பு நகர், ராயல் நகரில் மறுதார் தளம் அமைப்பது உட்பட, ரூ.1.64 கோடி மதிப்பிலான, 8 பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிதி நிலைமை சீரானதும், மேற்கண்ட பணிகளில் அத்தியாவசியமானவற்றை மீண்டும் கள ஆய்வு செய்து, திருத்திய நிர்வாக அனுமதி பெற்று செய்யப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இதேபோல், தொண்டாமுத்துார் தொகுதி மேம்பாட்டு நிதியில், காந்தி பார்க் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில், தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் பயணியர் நிழற்குடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.இயற்கை சூழலுடன் இதன் வடிவமைப்பை, கமிஷனர் மாற்ற உத்தரவிட்டதால், மறுடெண்டர் கோர, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.