தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 6நகராட்சிகளில் 1,63,542 ஆண்கள், 1, 72,993 பெண்கள், இதரர் 98 என 3,36,633 வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து நகராட்சிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். 22 பேரூராட்சிகளில் 1,36,127ஆண்கள், 1,42,183 பெண்கள், இதரர் 31 என மொத்தம் 2,78,341 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் சுழற்சி முறை பின்பற்றி தலைவர் பதவி ஒதுக்கீட்டு விபரம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. போடி, பெரியகுளம், கம்பம், சின்னமனுார், கூடலுார், தேனி-அல்லிநகரம் என அனைத்து நகராட்சி தலைவர் பதவிகளும் பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளில் சி.புதுப்பட்டி, தேவதானப்பட்டி, வீரபாண்டி ஆதிதிராவிடர் பெண்களுக்கும், கோம்பை, கெங்குவார்பட்டி, தென்கரை, தாமரைக்குளம், பி.மீனாட்சிபுரம், ைஹவேவிஸ் ஆகியவை ஆதிதிராவிடர் பொதுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணைபுரம், தேவாரம், ஆண்டிபட்டி பொது பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பூதிப்புரம், அனுமந்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குச்சனுார், மார்க்கையன்கோட்டை, மேலசொக்கநாதபுரம், ஓடைப்பட்டி, பழனிசெட்டிபட்டி, உத்தமபாளையம், வடுகபட்டி என 10 பேரூராட்சிகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க., தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி இருந்தது.
தற்போது 6 நகராட்சிகளிலும் பெண்களுக்கு ஒதுக்கியதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆனாலும் பதவியை கைப்பற்ற தங்கள் மனைவி, மகள்களை களமிறக்க வியூகம் வகுத்து வருகின்றனர்.