திருப்பூர்:பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தக் கோரி, திருப்பூரில் நேற்று, இரண்டாவது நாளாக, பின்னலாடை உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.
பஞ்சு, நுால் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்; நுால் விலை உயர்வை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினர் நேற்று முன்தினம், உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தினர். நேற்று, இரண்டாவது நாளாக, இப்போராட்டம் தொடர்ந்தது.
இரு நாட்களில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஆயத்த ஆடை மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி முடங்கியது.மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூர் ரயில் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொழில் அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.