சிதம்பரம்:ஊக்கத் தொகை வழங்கக் கோரி, மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர்கள், நேற்று மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக, ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பயிற்சி டாக்டர்களுக்கு, கடந்த 8 மாதமாக உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, கடந்த 14ம் தேதி முதல், பல்கலைக்கழக வளாகத்தில், தொடர் போராட்டத்தை பயிற்சி டாக்டர்கள் நடத்தி வருகின்றனர்.
கல்லுாரி நிர்வாகம் மற்றும் பல்கலை துணைவேந்தர் கதிரேசன், காவல் துறை அதிகாரிகள், பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படாததால், போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தின் 6வது நாளாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, மாணவர்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.
கொரோனா பாதிப்பு காலத்தில், தொற்று பாதித்தவர்கள் அதிகமாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு படையெடுக்கும் நிலையில், பயிற்சி டாக்டர்களின் போராட்டம், பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது.