புதுச்சேரி : வில்லியனுார் புறவழிச்சாலை - கோட்டைமேடு சாலை சந்திப்பில் உள்ள மெகா பள்ளங்களால் பெரும் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
புதுச்சேரிக்கு இணையாக வளர்ந்து வரும் வில்லியனுாரில் பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.வில்லியனுாரில் கடந்த ஆட்சியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், அனைத்து சாலைகளும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.இந்நிலையில் வில்லியனுார் புறவழி சாலையில் இருந்து கோட்டைமேடு வழியாக, முருங்கப்பாக்கம் வரையிலான 7.080 கி.மீ., துார சாலையை வடிகால் வசதியுடன் மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்), நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் காரணமாக, கோட்டைமேடு சாலை பராமரிப்பு பணியை, பொதுப்பணித் துறை முற்றிலுமாக கைவிட்டது.கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையில், வில்லியனுார் புறவழிச் சாலையில் இருந்து கோட்டைமேடு சாலைக்கு திரும்பும் பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்து, 20 மீட்டர் துாரத்திற்கு மெகா பள்ளங்களாக மாறியுள்ளது.மழை ஓய்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்த பள்ளங்களை இதுவரை சீரமைக்கவில்லை. புறவழிச் சாலையில் இருந்து கோட்டைமேடு சாலைக்கு வேகமாக திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள், அங்குள்ள மெகா பள்ளங்களில் சிக்கி விபத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த பள்ளங்களில் ஏறி இறங்கும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைவதும் தொடர்கதையாக உள்ளது.எனவே, பெரும் விபத்து நடப்பதற்கு முன், சாலையை சீரமைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் பள்ளங்களை மூடவாவது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விரைவில் பணி துவக்கம்இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறுகையில், 'வில்லியனுார் புறவழிச்சாலை முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரையிலான சாலையை அகலப்படுத்தி புதுப்பித்திட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் விட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் பணி துவங்கப்படும்' என்றார்.