திருப்பூர்:''சோதனை வந்த போதெல்லாம், சாதனைகளாக மாற்றிய பின்னலாடை தொழில்துறையினர், நுால் விலை உயர்வு பிரச்னையை எளிதில் முறியடிப்பார்கள்'' என்ற நம்பிக்கையுடன், தொழிலாளர்கள் உற்சாகத்துடன் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.
திருப்பூரில் மட்டும், 23 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் வசிக்கின்றனர்; தமிழகத்தின், அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பின்னலாடை தொழிலாளராக இருக்கின்றனர்.வந்தாரை வாழ வைக்கும் இந்த நகரம், கொரோனா ஊரடங்கிலும், முககவசம், முழு உடல் கவசம் உற்பத்தி என, தங்களது உற்பத்தி திறமையை பயன்படுத்தி, வீழ்ச்சி பெறாமல், தனது நிலையை தக்கவைத்துக்கொண்டது.
கடந்த, 2011ல், சாய ஆலைகள் மூடப்பட்ட போது, பின்னலாடை தொழிலின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட்டது. அ.தி.மு.க., அரசு அமைந்ததும், 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக கொடுத்து, பின்னலாடை தொழிலுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது.நீண்ட இடைவெளிக்கு பிறகு, அபரிமிதமான பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வால், மீண்டும் பின்னலாடை தொழில், பெரும் சவாலை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 35 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெறும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.இருப்பினும், நுால் விலை உயர்வு பெரும் தடைக்கல்லாக மாறிவிடக்கூடாது எனக் கருதினர். அபரிமிதமான நுால்விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இரண்டு நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. பொங்கல் விழா முடிந்து, நேற்றுமுன்தினமும், நேற்றும் நடந்த இந்த போராட்டம் நிறைவு பெற்றது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 13ம் தேதி முதல், பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் விழா, உற்பத்தி என, ஐந்து நாட்களுக்கு பிறகு, இன்று பனியன் தொழில் வழக்கமான இயக்கத்துக்கு திரும்ப இருக்கின்றன.பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்ற வெளிமாவட்ட தொழிலாளர்களும், வேகமாக திருப்பூர் திரும்பிவிட்டனர்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள், அதன்படி, இன்று முதல் பின்னலாடை உற்பத்தி தொழிலில் நிலையான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே, அனைவரது பிரார்த்தனையாக இருக்கிறது.புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏ.இ.பி.சி., தலைவர் நரேந்திர குமார் கோயங்கா, ''ஆர்டர் அதிகம் கைவசம் இருப்பதால், நிலையான, நீடித்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஒரே பிரச்னை, நுால் விலை உயர்வு.தொழில்துறையினரும், தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும், ஒருசேர கைகோர்த்து களமிறங்கி போராடியுள்ளன. இத்தகைய போராட்டம், நிச்சயம் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கும். அதன்படி, நுால்விலை உயர்வு பிரச்னைக்கு, தற்காலிக தீர்வாவது கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை பிறந்துள்ளது.புதிய வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன், பொங்கல் விடுமுறையை கழித்த பின்னலாடை தொழிலாளர்கள், இன்று புதிய நம்பிக்கையுடன் தங்களது இருக்கையை தேடிச்சென்று அமர்ந்து, ஆர்வத்துடன் பணியை துவக்க தயாராகி, வந்து கொண்டிருக்கின்றனர்.