தாம்பரம், ஜன. -௧௯-வண்டலுார் உயிரியல் பூங்காவில், கொரோனா பரிசோதனை எடுக்க பெண் சிறுத்தையை கூண்டிற்குள் அடைத்தபோது, மூச்சு திணறி இறந்தது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன
.பூங்காவின் இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவருக்கு, கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பூங்காவில் உள்ள வனச்சரக அதிகாரிகள் உட்பட, ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில், 76 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஜன., 31 வரை பூங்காவை மூட, கடந்த 17ம் தேதி உத்தரவிட்டது.ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சிங்கம், சிறுத்தை போன்ற வனவிலங்கு உயிரினங்களுக்கும் மருத்துவ பரிசோதனை எடுக்க, பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, கடந்த, 17ம் தேதி, பூங்காவில் உள்ள, ஜெயா எனப் பெயரிடப்பட்ட, 18 வயதான பெண் சிறுத்தையின் மூக்கு மற்றும் வாய் பகுதியில் இருந்து மாதிரிகளை எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பூங்கா டாக்டர்கள் தலைமையில் 'ஸ்க்வீஸ் கேஜ்' எனப்படும் கூண்டில், சிறுத்தையை அடைக்க பூங்கா ஊழியர்கள் முயற்சித்தனர்.சிறுத்தையை அடைக்க, கூண்டிற்கு வெளியே இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, மூச்சுத் திணறி சிறுத்தை இறந்தது. இறந்த சிறுத்தையின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், பூங்காவிலேயே அடக்கம் செய்யப்பட்டது.இது குறித்து, பூங்கா உயர் அதிகாரிகள், தலைமை வன உயிரின காப்பாளர் உட்பட, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், நேற்று, இத்ததகவல் வெளியே தெரிந்ததை அடுத்து, சம்பவம் பற்றி வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.ஏற்கனவே, கடந்த,16ம் தேதி, ௫ வயதுடைய விஷ்ணு என்ற ஆண் சிங்கம், கூண்டிற்குள் திடீரென இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனையில், இறந்த சிங்கத்தின் உணவு குழாயில் பாதிப்பு ஏற்பட்டு, அது வெடித்து கிழிந்த நிலையில் இருந்தது தெரிந்தது. நீண்ட நாட்களாக உணவு குழாயில் இருந்த பாதிப்பை, பூங்காவில் உள்ள டாக்டர்கள் முறையாக ஆய்வு செய்து, கண்டறியாததே இதற்கு காரணம் எனவும், குற்றச்சாட்டு எழுந்தது.தற்போது, சிறுத்தையும் அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடுகளால் உயிரிழந்திருப்பது, வனவிலங்கு ஆர்வலர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த, ஓராண்டில் மூன்று சிங்கங்கள், மூன்று சிறுத்தைகள், 14 நெருப்பு கோழிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பறவைகள் என, ஏராளமான உயிரினங்கள், அடுத்தடுத்த உடல் நலக்குறைபாடுகளாலும், கொரோனா தொற்றாலும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மாட்டிறைச்சி கொள்முதலில் ஊழல்?பறவைகள், விலங்குகள் என, பூங்காவில் பராமரிக்கப்படும் உயிரினங்களுக்கு, 400 கிலோ மாட்டிறைச்சி, 100 கிலோ கோழி இறைச்சி, 200 கிலோ மீன் இறைச்சிகளும் தினசரி, வழங்கப்படுகின்றன.இந்த இறைச்சி கொள்முதலில், தரமற்ற இறைச்சிகளை, ஒப்பந்த நிறுவனம், வினியோகிப்பதாக கூறப்படுகிறது.பூங்காவிற்கு வரும் இறைச்சிகளை, ஊழியர்கள் ஆய்வு செய்து, தரமற்ற இறைச்சி குறித்து, உயர் அதிகாரிகளிடம், புகார் அளித்தாலும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததே, அவற்றை, உண்ணும் விலங்குகள், நோயுற்று இறக்க காரணமாகி உள்ளதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்
.சமீபத்தில், ஆண் சிங்கம் விஷ்ணுவும், இதனாலேயே இறந்துள்ளதாக, அவர்கள் கூறுகின்றனர்.தொற்று பாதிப்பைமறைக்கும் நிர்வாகம்பூங்கா ஊழியர்களில், 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஊழியர்கள், அதிகாரிகள் என, பூங்காவில் பணிபுரிபவர்களில், 50 சதவீதம் பேர், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.கடந்த,10ம் தேதி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு, தொற்று உறுதியானபோதே, ஊழியர்கள் சிலர், பூங்காவை பொங்கல் முடியும் வரை, மூட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.அதை, இயக்குனர் கருணப்பிரியா கருத்தில் கொள்ளாமல், பூங்காவை திறந்ததே, ஊழியர்கள் பாதிக்க, காரணமாகி உள்ளது. அதனால், கொரோனா தொற்றால், மீண்டும் விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.