திருத்தணி l கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி நேற்று நடந்தது. மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தடுத்து அனுப்பியதால், அங்கு வேல் பகுதியில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை, கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என, அரசு அறிவித்து இருந்தது.திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை மற்றும் திருக்குளம் வழியாக படி ஏறும் இடத்தில், பக்தர்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்தும், கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்திருந்தும், நேற்று தைப்பூசத்தையொட்டி, வெளியூர் பக்தர்கள் மலைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல முயன்றனர். அங்கிருந்த போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்களை தடுத்து, திருப்பி அனுப்பினர்.இதையடுத்து, அங்கிருந்த கோவில் வேல் பகுதியில் தேங்காய் உடைத்து, பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். மேலும், பூ மாலைகளை வேலுக்கு அணிவித்து வழிபட்டனர்.நேற்று மட்டும், மலைக்கோவில், மலைப்பாதை மற்றும் படிகள் ஏறும் வழியில் என கோவிலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.