சென்னை : ஓ.எம்.ஆர்., நுாக்கம்பாளையம் சாலையில், கால்வாய் குறுக்கே 3.52 கோடியில் கட்டப்படும் தரைப்பாலம் பணி, மீண்டும் வேகமெடுத்துள்ளது.ஓ.எம்.ஆரில் இருந்து, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு செல்லும், நுாக்கம்பாளையம் சாலை 60 அடி அகலம் உடையது.இந்த சாலையின் குறுக்கே, செம்மஞ்சேரி கால்வாய் செல்கிறது.
மேடவாக்கம், சேலையூர், நாவலுார், காரணை, சித்தாலப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில், 40க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வடியும் உபரிநீர், இந்த கால்வாய் வழியாக ஒக்கியம்மடு செல்கிறது.இந்த கால்வாயின் குறுக்கே, பெரிய சிமென்ட் குழாய் பதித்து, தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுக்குமுன், கனமழையின்போது, தரைப்பாலம் சேதமடைந்தது.குழாயில், அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைபட்டது. இந்நிலையில், குழாய் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, கான்கிரீட் தரைப்பாலம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.கால்வாயின் குறுக்கே, நுாக்கம்பாளையம் சாலையில், 3.52 கோடி ரூபாயில், 60 அடி அகலம், 120 அடி நீளத்தில் தரைப்பாலம் அமைக்க, நான்கு மாதத்திற்குமுன் பூஜை போடப்பட்டது.பணி துவங்கிய நிலையில், நவம்பர் மாதம் கனமழையில் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும், பணி துவங்கிய நிலையில், டிச., 30ம் தேதி எதிர்பாராத மழையால், பணி பாதித்தது.இந்நிலையில், மீண்டும் பணி துவங்கியது. பில்லர் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மூன்று மாதத்தில், அனைத்து பணிகளையும் முடித்து, தரைப்பாலத்தை திறக்க, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.