நுங்கம்பாக்கம் : சூளைமேடு பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி பினுவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கொளத்துார், விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பினு, 51; பிரபல ரவுடி. சில ஆண்டுகளுக்கு முன், மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம் பகுதியில், 100க்கு மேற்பட்ட ரவுடிகளுடன் சேர்ந்து, தன் பிறந்த நாளில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது துப்பாக்கி முனையில், ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில், பினு உள்ளிட்ட சிலர் தப்பியோடிய நிலையில், 70 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தேடப்பட்ட பினு, அம்பத்துார் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்தார்.பின், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த பினு, ஒரு நாள் கூட மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்து போடவில்லை.இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அருகே பதுங்கியிருந்த பினுவை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த பினு, சூளைமேடில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று போரூர் அருகே வைத்து பினுவை கைது செய்தனர்.