சென்னை : அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்த டாக்டர் சாந்தா உயிர் இழந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.சாந்தாவின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் செல்வலக்ஷ்மி வெளியிட்ட செய்தி குறிப்பு:அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா, 67 ஆண்டுகளுக்கு மேலாக தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும், புற்றுநோய்க்கு எதிராக வெற்றி கண்டவர். குறிப்பாக, புற்றுநோய் என்றாலே மரணம் என்ற நிலையை மாற்றி பலருக்கு இயல்பு வாழ்க்கை உண்டு என்பதை உறுதிப்படுத்தினார்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய காரணங்களை கண்டறிந்து தடுப்பது, புகையிலையை தடை செய்வதில் அரசுடன் இணைந்து பணியாற்றியது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் வெற்றி கண்டார்.தன் வாழ்நாளில் பல விருதுகளை டாக்டர் சாந்தா பெற்றிருந்தாலும், அவர் பெரிதாக நினைத்த விருது, அடையாறு புற்றுநோய் மையம் தான். புற்றுநோயாளியின் முகத்தில் தெரியும் சிரிப்பையும், சந்தோஷத்தையும், தன் சந்தோஷமாக நினைத்து, புற்றுநோய் மருத்துவமனையிலேயே, 93 வயது வரை வாழ்ந்தார்.எங்கள் குருவாக, நோயாளிகளிடம் எப்படி பேச வேண்டும்; சொல்ல வேண்டியவை, சொல்லக்கூடாதவை போன்ற குறித்து எங்களுக்கு பயிற்றுவித்துள்ளார்.
அவருடன் பயணித்த டாக்டர்கள், அவரின் செயல்பாடுகளை இன்றும் தொடர்ந்து தவறாது செயல்படுத்தி வருகின்றனர்.அவர் இன்னும் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், அவர் கொள்கை, செயல்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.