கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கடந்தாண்டு 78,143 பேர், 108 ஆம்புலன்சை பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு அவசர மருத்துவ உதவி சிகிச்சைக்காக தமிழக அரசு, ஜி.வி.கே.,நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையை துவக்கியது. கடலுார் மாவட்டத்தில் 51 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில், அதி நவீன ஆம்புலன்ஸ் 7, பச்சிளங் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் 2, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் சுலபமாக செல்ல பயன்படும் இருசக்கர வாகனம் 1, மீதமுள்ள 41 வாகனங்கள் வழக்கமான சிகிச்சை வாகனங்களாகும். கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 2020ம் ஆண்டு ஊரடங்கில் பொது போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்ததால் கர்ப்பிணிகள் பலரை பிரசவத்திற்கு முன் கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பிரசவம் உள்ளிட்ட இதர அவசர மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லவும், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் 108 ஆம்புலன்ஸ் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.கடந்த 2021 ஜனவரி முதல், 2021 டிசம்பர் வரை பிரசவ சிகிச்சைக்கு 20 ஆயிரத்து 811 பேர், சாலை விபத்துகளில் காயமடைந்தோர் 11 ஆயிரத்து 601, இருதய நோய் தொடர்பாக 3,655, கொரோனா நோயாளிகள் 13 ஆயிரத்து 773, பக்கவாதம் பிரச்னை தொடர்பாக 1,033 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விஷ சிகிச்சைக்கு 3,088, நாய், பாம்பு கடித்தது தொடர்பாக 1,397, சுவாசக் கோளாறு 3,407, உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட இதர நோய்கள் தொடர்பாக 19,378 பேர் உட்பட 78 ஆயிரத்து 143 பேர் ஆம்புலன்களை பயன்படுத்தினர். மேலும் 86 பிரசவங்கள் ஆம்புலன்சிலேயே நடந்துள்ளன. பிரசவ சிகிச்சைக்காக கர்ப்பிணிகளை அழைத்து வர செல்லும் போது, வீடுகளிலேயே 145 குழந்தைகள் பிறந்தன. கடந்த 2020ம் ஆண்டு 52 ஆயிரத்து 386 பேர் ஆம்புலன்சை பயன்படுத்திய நிலையில் 2021ம் ஆண்டு கூடுதலாக 26 ஆயிரத்து 757 பேர் சேர்த்து 78 ஆயிரத்து 143 பேர் சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.