பல்லடம்:திருப்பூர் இடுவாயை சேர்ந்த, 6 மாணவர்கள் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, ஆழமான பகுதியில் மூழ்கி இறந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: அமராவதி ஆற்றின் பல்வேறு இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. குளிக்கச் செல்லும் பலர் பள்ளம் இருப்பது தெரியாமல் ஆழத்தில் சிக்கி நீரில் மூழ்கி இறப்பது தொடர்கதையாகி வருகிறது.கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தியின் போது இதேபோல், திருப்பூர் இடுவாயை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மீண்டும் அதே பகுதியில், இடுவாய் சேர்ந்த, 6 பேர் இறந்த சம்பவம் நடந்துள்ளது.மேலும், கடந்த காலங்களில் பல்வேறு உயிர்களை பலி வாங்கியுள்ளது. ஆண்டுதோறும் இதுபோன்று உயிர்பலி வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்த போதும், பொதுப்பணி துறை, மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.விபத்து ஏற்படும் பகுதியில், எச்சரிக்கை பலகை வைக்கவும், தடுப்புகள் வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.