கடலுார் : நிலப் பிரச்னையில் அண்ணன் மாமியாரின் கழுத்தை கத்தியால் அறுத்த தம்பியை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், புத்துார் அடுத்த ராயநல்லுார் ஆறுமுகம் மகன்கள் பக்கிரிசாமி, 48; பழனிவேல் 40. இவர்களுக்குள் நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
ஒரே வீட்டில் பக்கிரிசாமி தரை தளத்திலும், பழனிவேல் முதல் தளத்திலும் வசிக்கின்றனர். இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இருவரையும் ஊர் முக்கியஸ்தர்கள் அழைத்து பேசி, இருவரில் ஒருவர் வீட்டை காலி செய்ய வேண்டும், மற்றவர் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட வேண்டும், சித்திரை மாதம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என, பேசி முடித்தனர். கடந்த 17ம் தேதி பழனிவேல் தனது வீட்டு சாமான்களை பக்கிரிசாமியின் வீட்டு வராண்டாவில் வைத்து, வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என, கூறினார். இதனால், பக்கிரிசாமியின் மனைவி காமாட்சி தனது தாய் அரியலுார் மாவட்டம், பெரியதத்தனுாரை சேர்ந்த குப்பம்மாளுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். குப்பம்மாள் வந்து, ஊராரை அழைத்து பேசியபோது, பழனிவேல் கேட்கவில்லை. இதனால், போலீஸ் ஸ்டேஷனில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என ஊரார் தெரிவித்துவிட்டனர். காமாட்சியும், அவரது தாய் குப்பம்மாளும் புத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க சென்றனர். அப்போது பழனிவேல், இதற்கெல்லாம் நீதான் காரணம் என, குப்பம்மாளை ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருத்த சிறிய கத்தியால், அவரது கழுத்தை அறுத்தார். காயமடைந்த குப்பம்மாள் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, பழனிவேலை கைது செய்தனர்.