குன்னுார்:குன்னுார் நகராட்சியில் முதல்முறையாக கோழி மீன் உள்ளிட்ட கழிவுகளை உரமாக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.குன்னுார் நகராட்சியில் நாள்தோறும், 4 முதல் 5 டன் அளவில் மட்கும், மட்கா குப்பை சேகரமாகிறது. இவை ஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டு தரம்பிரிக்கப்படுகிறது.இந்நிலையில், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் ஒரு டன் அளவிலான, கோழி, மீன், இதர உணவு கழிவுகளை உரமாக்கும் திட்டம், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முயற்சியில், முதல்முறையாக துவங்கப்பட்டது. இத்திட்டம் தற்போது வெற்றி அடைந்துள்ளது.இது குறித்து, 'கிளீன் குன்னுார்' தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வசந்தன் கூறுகையில்,''மட்கும் குப்பை உரமாக்குவது மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் உள்ளது. ஆனால், கோழி, மீன் கழிவுகள், நார் கழிவுகளை குறிப்பிட்ட வெப்பநிலையில், 'பல்வரைசர்' எனும் இயந்திரத்தில் அரைத்து உரமாக மாற்றும் திட்டம் குன்னுார் நகராட்சியில் மட்டுமே உள்ளது. பின் 'விண்ட் ரோ கம்போசிங்' முறையில், காற்று, வெளிச்சம் உள்ள இடத்தில் பதப்படுத்தப்படுகிறது. இவை, 30 நாட்களில் உரமாக தயாராகிறது. இந்த உரம், இயற்கை சார்ந்த விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் கிடைக்கும் வருமானம் இங்குள்ள துாய்மை பணியாளர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது,'' என்றார்.