கூடலுார்:கூடலுார், நாடுகாணி அருகே, தொடர் விபத்துகள் நடந்த சாலை பகுதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.தமிழக- கேரளா எல்லையை ஒட்டிய, சேதமடைந்துள்ள நாடுகாணி சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வாகன நுழைவு வரி வசூல் மையம், அருகே, சாலை சேதமடைந்த பகுதியில், இரண்டு வாரத்தில் நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானது.'தொடரும், விபத்துக்களை தடுக்க அப்பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும்: இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, டிரைவர்கள் எச்சரித்தனர்.இதனை தொடர்ந்து, சாலை ஆய்வாளர்கள் அனிபா, தேவராஜ் மேற்பார்வையில், பொக்லைன்மூலம், அப்பகுதி சாலை தற்காலிகமாக சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.டிரைவர்கள் கூறுகையில்,'அப்பகுதியில் தற்காலிக பணி நடப்பது வரவேற்கதக்கது. எனினும், நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை சேதமடைந்துள்ள சாலையை முழுமையாக சீரமைத்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்,' என்றனர்.