கோவை:கோவை, குனியமுத்துாரில் பழைய குடோனில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில், இரண்டாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 17ம் தேதி குனியமுத்துார் பி.கே.புதுாரில் உள்ள ஒரு பழைய குடோனில், சிறுத்தை பதுங்கி உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.சிறுத்தையை பிடிக்க, குடோன் நுழைவுவாயிலில் இரண்டு கூண்டுகள் அமைக்கப்பட்டன. முதல்நாள் முயற்சி வெற்றி பெறாத நிலையில், நேற்றும் சிறுத்தையை பிடிப்பதற்கான பணி தொடர்ந்தது.நேற்று காலை முதலே பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் 'தண்ணி காட்டி' வருகிறது. இதனால், மின் விளக்குகள் அமைத்து இரவு நேரத்தில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.கோவை கோட்ட வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில், ''மூன்று வயது மதிக்கத்தக்க, ஆண் சிறுத்தை இது. குடோனில் உள்ள ஆறு அறைகள், இரண்டு வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் கூண்டுக்குள் சிக்கும் என எதிர்பார்க்கிறோம். சிறுத்தை அகப்பட்டால், வனப்பகுதிக்குள் விடப்படும்,'' என்றார்.குடோனில் சிக்கிய 'ட்ரோன்'சிறுத்தையை கண்காணிக்க, 'ட்ரோன் கேமரா' பறக்க விடப்பட்டது. பழைய கழிவுப்பொருட்களில் சிக்கி, 'ட்ரோன் கேமரா' குடோனுக்குள் மாட்டிக்கொண்டது. இதனால், 10 அடி உயர கொடி கம்பத்தில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.