தமிழகத்தில், அரசின் முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, நுாற்றுக்கணக்கான சிலைகள் விரைவில் அகற்றப்படும் வாய்ப்புள்ளது.கோவை காந்திபுரம் மற்றும் அவிநாசி ரோடு ஆகிய இரு இடங்களில், அண்ணாதுரை சிலை உள்ளது. இவற்றில் அவிநாசி ரோட்டிலுள்ள சிலை, அ.தி.மு.க.,வினராலும், காந்திபுரத்திலுள்ள சிலை, தி.மு.க.,வினராலும் பராமரிக்கப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, அவிநாசி ரோடு அண்ணாதுரை சிலை அருகில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டன.அரசின் முறையான அனுமதியின்றி, அவசரகதியில் இந்த சிலைகள் நிறுவப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவையும், அரசு விதிமுறைகளையும் பின்பற்றாமல், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் உட்பட தமிழகம் முழுவதும் அரசின் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றக்கோரி, ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர், 'அனைத்துத்தலைவர்களும் மரியாதைக்கு உரியவர்கள்; யாரையும், அவமரியாதை செய்யவில்லை. ஆனால், அரசு நிலத்தை, சிலைகள் நிறுவ பயன்படுத்தக் கூடாது. அரசின் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.அத்துடன், தமிழக அரசின் தலைமைச் செயலரும், கோவை மாநகராட்சியும் பதிலளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியது. வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், அரசின் அனுமதியுடன் அரசு மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்த தகவல்களை அரசு வாங்கியுள்ளது.
இந்த விபரங்கள், அட்டவணையாகத் தொகுக்கப்பட்டு, தலைமைச் செயலர் சார்பில் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது, அட்டவணையில் இல்லாத சிலைகள் அனைத்தையும் உடனடியாக அகற்றுவதற்கு, ஐகோர்ட் உத்தரவிடும் வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதால், அவை அனைத்தும் அகற்றப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.அறிவாலய சிலைகளுக்கும் சிக்கல்தி.மு.க., தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயம் கட்டப்பட்டபோது, அதற்கான திறந்த வெளியிடம் மாநகராட்சி வசம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை.
அந்த இடம் பூங்காவாக மாற்றப்பட்டு அங்கு அண்ணாதுரை சிலை வைக்கப்பட்டிருந்தது. அருகிலுள்ள இடம், 'பார்க்கிங்' ஆக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2018ம் ஆண்டில், அண்ணாதுரை சிலைக்கு அருகில் கருணாநிதி சிலையும் அமைக்கப்பட்டது. அரசு இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று, ஐகோர்ட் உறுதியாக உத்தரவிடும்பட்சத்தில், பொது ஒதுக்கீட்டு இடமாக உள்ள இந்த இடத்திலுள்ள அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளுக்கும் சிக்கல் ஏற்படும்.-நமது நிருபர்-