உடுமலை:திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் சிரமத்தை குறைக்க, தகவல் தொழில்நுட்ப வசதியுடன், ஒவ்வொரு பிரிவும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது.அதன்படி, நோயாளிகள் வருகைப்பதிவு, டாக்டர் சந்திப்பு, மருந்து மாத்திரை பெறுவதும் என, அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.குறிப்பாக, தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகள், அந்தந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவனையுடன் ஒரே சாப்ட்வேரில் இணைக்கப்பட்டன. அவ்வகையில், உடுமலை அரசு மருத்துவமனையின் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுவிலும், கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டது.ஆனால், சர்வர் கோளாறு காரணமாக, பதிவு செய்யும் இடம் மற்றும் மாத்திரை பெறும் இடத்தில், நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.பழுது நீக்கம் சரிவர மேற்கொள்ளப்படாத நிலையில், இத்திட்டம் குறுகிய காலத்திலேயே கைவிடப்பட்டது. மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:மருத்துவமனையில், அந்தந்த சிகிச்சை பிரிவுகளில் கம்ப்யூட்டர், டேபிள், இருக்கை, யூ.பி.எஸ்., மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளன. ஆனால், போதிய பயன்பாட்டில் இல்லை.சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டால், எந்தவொரு அரசு மருத்துவமனையிலும், நோய்க்கான மருந்துகளை எளிதில் பெற முடியும்.சர்வர்கோளாறு, பணியாளர்களுக்கு பயிற்சி இல்லாமை போன்ற பல காரணங்களால், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை. தற்போதைய சூழலில், மருத்துவம் சார்ந்த ஆவணங்கள், குறிப்புகள் உள்ளிட்டவைகளை அனுப்புவதற்கு மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.