பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பக்தர்கள், பாதயாத்திரையாக செல்கின்றனர். முருகனை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.பழநியில், தைப்பூசத்திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் குறைந்தபட்சமாக, 15 நாட்கள்; அதிகபட்சமாக, 48 நாட்கள் விரதமிருந்து மாலை அணிந்து முருகனை வழிபடுகின்றனர்.விரதமிருக்கும் பக்தர்கள், பாத யாத்திரையாக சென்று முருகனை தரிசிக்கின்றனர். சிலர் வேண்டுதலை நிறைவேற்ற தேர் இழுத்தும்; காவடி எடுத்துச் செல்கின்றனர். முருகனை வேண்டி, பாடல்களை பாடிய படி செல்கின்றனர்.நடப்பாண்டில், தை பூசத்தையொட்டி, கோவை, கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதியில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும், பழநி கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்ல துவங்கியுள்ளனர்.நம்பிக்கை பயணம்தைபூசத்தையொட்டி நேற்று வரை கோவில்களில் வழிபாட்டுக்கு அரசு தடைவிதித்தது. இதனால், பக்தர்கள், பழநியில் முருகப்பெருமானை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், நடைபயணம் மேற்கொள்வோர், பொள்ளாச்சி பகுதியில் ஆங்காங்கே தங்கி ஓய்வு எடுத்து செல்கின்றனர்.இந்நிலையில், இன்று முதல் கோவில்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படுவதால், பக்தர்கள் ஆர்வமாக செல்கின்றனர். இன்று கோவில்கள் திறக்கப்பட்டு, சுவாமியை வழிபாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றனர்.உணவு வழங்கல்பழநி முருகன் தீர்த்த காவடி குழு, பொள்ளாச்சி வெங்காய வியாபாரிகள் சங்கம் சார்பில், ஏழாவது ஆண்டாக பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பழங்கள், உணவுகள் வழங்கப்பட்டன.பாதுகாப்பு தேவைகோவை ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும், பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். சிறு குழுக்களாகவும், தனித்தனியாகவும் பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும், வெயில் தாக்கத்தை தவிர்க்க, பகலில் ஓய்வெடுத்து, மாலை துவங்கி, இரவு முழுக்க பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். கனரக வாகன போக்குவரத்து மிக்க நெடுஞ்சாலையோரங்களில் நடந்து செல்கின்றனர்.சமீப ஆண்டுகளாக, விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்க, உடைகளில் முன்னும், பின்னும் வாகன முகப்பு விளக்கின் ஒளியை பிரதிபலிக்கும் 'ரிப்ளக்டர் ஸ்டிக்கர்'களை ஒட்டிக் கொண்டு செல்வது வழக்கம்.ஆனால், இந்தாண்டு பெரும்பாலானவர்கள் அதை பின்பற்றவில்லை. பொது நல அமைப்புகள், தன்னார்வலர்கள், போலீசார் சார்பில், மேற்கொள்ளப்படும், 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி இந்தாண்டு கைவிடப்பட்டுள்ளது. பழநி செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு 'ரிப்ளக்டர் ஸ்டிக்கர்'கள் ஒட்டி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.