விழுப்புரம், : இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி, 3.28 லட்சம் ரூபாயை நுாதன முறையில் ஏமாற்றிய பெண் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த கன்னலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் சிவப்பிரகாஷ், 24; இன்ஜினியரிங் கல்லுாரி இறுதியாண்டு மாணவர். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண், அமெரிக்காவில் இருப்பதாக கூறி பழகி உள்ளார்.
திடீரென ஒரு நாள், அமெரிக்காவில் இருந்து உங்களுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள ஐபோனை கூரியர் மூலம் அனுப்புகிறேன் என கூறியுள்ளார்.சில தினங்கள் கழித்து சிவப்பிரகாஷின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர், டில்லி கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன், உங்களுக்கு பார்சல் வந்துள்ளது, அதனை பெற கூரியர் கட்டணம், வரி உள்ளிட்டவைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதனை நம்பிய சிவப்பிரகாஷ், தனது வங்கிக் கணக்கிலிருந்து மூன்று தவணைகளாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 3 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பியுள்ளார். இருப்பினும், எந்த பார்சலும் வரவில்லை. சந்தேகமடைந்த சிவப்பிரகாஷ், அந்த நபரை மொபைலில் தொடர்பு கொண்ட போது, அந்த எண் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. அந்த பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.