கடலுார் : வேப்பூரில் இருந்து, ஆந்திராவுக்கு 23 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 3 பேரை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் போலீசார், கடந்த 26ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மாங்குளம் வே பிரிட்ஜில் எடை போட்டுக் கொண்டிருந்த லாரியை சோதனை செய்தனர். இதில், 23 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, மங்களூர் ரஞ்சித், 25; வேல்முருகன், 30; ராமலிங்கம், வேலுார் மாவட்டம், அரியூர்குப்பம் புருஷோத்தமன், 32; சங்கரன்பாளையம் ராமச்சந்திரன் உட்பட 6 பேரை பிடித்து, கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித் உட்பட 6 பேரை கைது செய்து, விழுப்புரம் கிளை சிறையில் அடைத்தனர். இதில், முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித், வேல்முருகன், ராமச்சந்திரன் ஆகியோரை கள்ளச்சந்தையர் தடுப்பு சட்டத்தின்(குண்டர் சட்டம்) கீழ் கைது செய்ய கலெக்டர் பாலசுப்ரமணியத்திற்கு, சென்னை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை எஸ்.பி., ஸ்டாலின் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், ரஞ்சித் உட்பட 3 பேரும் கள்ளச்சந்தையர் தடுப்பு சட்டத்தில் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டனர்.