வானுார் : தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர்கள் தலைமையில், ஆரோவில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் நிர்வாக கமிட்டிக்கு புதிய சேர்மனாக தமிழக கவர்னர் ரவி மற்றும் உறுப்பினர்களாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.புதிய சேர்மன் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த முதல் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதில், மாத்திர் மந்திர் பகுதியைச் சுற்றி 50 ஆயிரம் ஆரோவில் வாசிகள் வசிக்கும் வகையில் கிரவுன் சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டு, அதற்காக மரங்கள் வெட்டும் பணி நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மரங்கள் வெட்ட தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பசுமை தீர்ப்பாயம் தற்காலிகமாக மரங்கள் வெட்டுவதற்கு தடை விதித்ததால், கிரவுன் சாலை பணிகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், தமிழக கவர்னரும், ஆரோவில் கமிட்டி சேர்மனுமான ரவி தலைமையில் இரண்டாவது ஆலோசனைக்கூட்டம் நேற்று டவுன் ஹாலில் நடந்தது.முன்னதாக, கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழசை ஆகியோரை கலெக்டர் மோகன் வரவேற்றார். கூட்டத்தில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மதியம் வரை நடந்த கூட்டத்தில், ஆரோவில் விரிவாக்கப் பணிகள் குறித்தும், கிரவுன் சாலை அமைக்கும் பணி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிற்பகல் செயற்குழு, நகர விரிவாக்கக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.அதில், வளர்ச்சித் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டம் இரவு 7:00 மணிக்கு நிறைவு பெற்றது.இதற்கிடையே கிரவுன் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவினருடன், சேர்மன் ரவி, உறுப்பினர் தமிழிசை தலைமையில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.