சென்னை: நுாறு நாள் வேலை திட்டத்தில், ஊராட்சி இடுகாடில் வெட்டப்பட்ட புதிய புதைகுழிகளால், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகிய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், ஜெகன்னாதபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி இடுகாடு உள்ளது.
அதை, சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு, 4 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட, 50க்கும் மேற்பட்ட புதைகுழிகள் வெட்டப்பட்டன.
இதனால், ஒரே நேரத்தில் இத்தனை குழிகளா, யார், எப்படி இறந்திருப்பார்கள் என, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அவற்றில் ஓரிரு குழிகளில், சடலங்கள் புதைக்கப்பட்டது போல், மண் குவித்து மூடப்பட்டிருந்தது. இதனால், 'அட்வான்ஸ் புக்கிங்'கில் புதைகுழிகள் வெட்டப்பட்டு, அதில் சடலம் புதைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
அத்துடன், சம்பவ இடத்தில், ஏராளமான மதுபாட்டில்களும் இருந்தன. இது குறித்து, அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது, கடந்த மாதம், நுாறு நாள் வேலை திட்டத்தின் மூலம், இந்த குழிகள் வெட்டப்பட்டது தெரிந்தது.
இந்த புதிய புதைகுழிகள், 'பகீர்' உணர்வை ஏற்படுத்தி உள்ளன. அத்துடன், நுாறு நாள் வேலை திட்டத்தை, இடுகாடில் புதைகுழி வெட்டவா பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், இதுபோன்ற பணிகளை நேரில் ஆய்வு செய்து, நுாறு நாள் வேலை திட்டத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் நீர்நிலை பாதுகாப்பு, மழை நீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதனால், மக்களிடையே தேவையற்ற அச்சம் தவிர்க்கப்படும்.