கோவை: ஹாலிடே பதிவு நாள் அடிப்படையில், சிறப்பு கட்டணம் செலுத்தி நேற்று பத்திரப்பதிவு நடைபெற்றது. பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள, 17 சார்பதிவாளர் அலுவலகங்களில், நேற்று ஹாலிடே சிறப்பு பத்திரப்பதிவு நடைபெற்றது.இந்த பதிவுக்கு, முன்னதாகவே ஆவண எழுத்தர்கள் மற்றும் நிலம் அல்லது வீட்டுமனை மற்றும் வீடு வாங்குபவர்கள், இணையம் வாயிலாக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றிருந்தனர். அதன்படி குறித்த நேரத்தில் டோக்கன் அடிப்படையில், பத்திரப்பதிவு செய்தனர்.
கோவை ராஜவீதி, கலெக்டர் அலுவலகத்திலுள்ள இணைபதிவாளர் 1 மற்றும் 2 காந்திபுரம், சிங்காநல்லுார், மதுக்கரை உள்ளிட்ட 17 சார்பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நேற்று வருவாயாக கிடைத்தது.
தைப்பூசத்திருவிழா நாளில், நேற்று பவுர்ணமியும் இணைந்து வந்திருந்தது. வளர்பிறை திதியும் சேர்ந்திருந்ததால், ஏராளமானோர் வீடு மனை, நிலம் ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்து வாங்கினர்.
ஆவண எழுத்தர் ஒருவர் கூறுகையில், 'ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு, தைப்பூசம், சித்திரைப்பிறப்பு (தமிழ்புத்தாண்டு) ஆகிய மூன்று நாட்கள், அரசு விடுமுறையாக இருந்தாலும், ஹாலிடே பதிவு முறையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும். 'அதற்கென்று முன்னதாக, இணையத்தில் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்' என்றார்.