மேட்டுப்பாளையம் : சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரமடையில், வார்டு மறுவரையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. அவற்றைச் சரி செய்த பிறகே, உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பின்னர், 18 வார்டுகளாக இருந்ததை, 27 வார்டுகளாக உயர்த்தி, வார்டு மறுவரையறை செய்யப்பட்டது. இதில், ஏராளமான குறைபாடுகளும், குளறுபடிகளும் நிறைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக, காரமடை பா.ஜ., சார்பில், நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:காரமடை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 18 வார்டுகள், 27 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. வார்டு மறுவரையறைக்குப் பின், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம், நகராட்சி கமிஷனரால் நடத்தப்பட்டது.அப்போது, நகராட்சி கமிஷனர் நகராட்சியில், 13,000 குடியிருப்புகள் இருப்பதாகவும். அதன் அடிப்படையில், குறைந்தபட்சம், 500 குடியிருப்புகள் கொண்டதாக வார்டுகள் பிரிக்கப்பட்டிருப்பதாக, தெரிவித்தார்.
ஆனால், வாக்காளர் பெயர் பட்டியல் வந்த பின், சரிபார்த்தபோது, ஒருசில வார்டுகளில், 450 ஓட்டுகள் முதல், 1,900 ஓட்டுகள் வரை உள்ளன.மேலும், வாக்காளர் பட்டியலில் தெருக்களின் பெயர்கள் முழுமையாக இடம்பெறவில்லை. இது, பல்வேறு குழப்பங்களை விளைவிக்கும். பல வார்டுகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வார்டுகளுக்கான ஆண், பெண் இட ஒதுக்கீட்டில், காரமடையில் வடக்கு பகுதி முழுவதும் ஆண்களுக்கு எனவும், தென்பகுதி முழுவதும் பெண்களுக்கு எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பேரூராட்சியின் ஒரு பகுதி முழுவதும் ஆண் உறுப்பினர்கள், ஒரு பகுதி வார்டுகள் முழுவதும் பெண் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். பாலின ஒதுக்கீடு என்பது சமச்சீராக இல்லை.இதுபோன்ற குளறுபடிகளைச் சரி செய்த பிறகே, உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரமடை மத்திய ஒன்றிய பா.ஜ., தலைவர் விக்னேஷ் கூறுகையில், "வார்டு மறுவரையில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்த பிறகே, தேர்தல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால், பா.ஜ., சார்பில், நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும்" என்றார்.