கோவை : கோவை மாநகராட்சியில் குண்டும் குழியுமாக இருக்கும் ரோடுகளை புதுப்பிக்க, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தில் (டூரிப்) ரூ.10.01 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிகள், 12 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக, 10 வேலைகள் துவக்க, டெண்டர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.15.10 கோடிக்கு தார் ரோடு போடப்படுகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்க, மழை நீர் வடிகால் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தோண்டப்பட்ட ரோடுகள் புதுப்பிக்கப்படாததால், குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் தெருவிளக்குகளும் எரியாமல் இருப்பதால், ரோட்டில் உள்ள குழி தெரியாமல், தடுமாற்றம் அடைந்து, கீழே விழுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தில், முதல்கட்டமாக, 10.01 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்தொகையில், 12 சிப்பங்களாக பிரித்து, திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதில், 14, 30, 51, 53, 60, 61, 64, 75, 92, 95 ஆகிய வார்டுகளில் உள்ள வீதிகளில் தார் சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.இதற்கென டெண்டர் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள, 10 பணிகளில், 9 பணிகளை, ரூ.7.33 கோடிக்கு ஒரே நிறுவனமும், ஒரே ஒரு பணியை, 98.65 லட்சத்துக்கு இன்னொரு நிறுவனமும் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
பாலம் பணி 'கேன்சல்'
ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ரோடு, மழை நீர் வடிகால் மேம்பாலம், சிறுபால்கள் அமைக்க ரூ.30.22 கோடி ஒதுக்கி, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியிருந்தது. திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 8 சிப்பங்களாக வேலைகள் பிரிக்கப்பட்டிருந்தன. இதில், குறிச்சி குளத்தை கடக்கும் பொள்ளாச்சி ரோட்டில் புதிதாக பாலம் கட்டுவதற்கு ரூ.15.10 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பணியை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ரத்து செய்து, நெடுஞ்சாலைத்துறை மூலமாக செய்வதற்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்நிதியை பயன்படுத்தி, புதிதாக சிறு பாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட ரோடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க, தமிழக அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, ரூ.15.10 கோடிக்கு தார் ரோடு மற்றும் சிமென்ட் கான்கிரீட் தளம் போடப்படுகிறது.
இதில், ரூ.3.24 கோடிக்கு ரோடு பணி முடிந்து விட்டது. ரூ.5.14 கோடிக்கு ரோடு போடும் பணி நடந்து வருகிறது. ரூ.1.88 கோடிக்கான வேலை துவங்க இருக்கிறது. ரூ.4.84 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு மாநகராட்சியில் இருந்து கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.