சோமனுார் : 'தங்களது வார்டை, பொது பிரிவினருக்கு மாற்ற வேண்டும்' எனக்கோரி கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தை, பொதுமக்கள் சிலர் முற்றுகையிட்டனர்.
பேரூராட்சியாக இருந்த கருமத்தம்பட்டி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. வார்டு எண்ணிக்கை, 18லிருந்து, 27ஆக அதிகரிக்கப்பட்டது.அதில், சென்னியாண்டவர் கோவில், எலச்சிபாளையம் பகுதிகளை உள்ளடக்கிய மூன்றாவது வார்டு, தனி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் பொது வார்டாக மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் சிலர், நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில்,'மற்ற வார்டுகளை விட, எங்கள் வார்டில் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை குறைவு. எந்த அடிப்படையில் தனி வார்டாக அறிவித்தார்கள் என தெரியவில்லை. எனவே, மீண்டும் பொது வார்டாக மாற்றித் தர வேண்டும்' என்றனர்.