திருப்பூர் : ''பள்ளி திறக்கப்படும் வரை 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ் இயங்கும் மையங்களில் மாணவர்கள் பாடங்களை படிக்கலாம்'' என்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது, ''மூன்றாம் அலை துவங்கியுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அளித்த பயிற்சிகள் பாதிக்காமல் இருக்க மாணவர்கள் அவரவர் பகுதியில் செயல்பட்டு வரும் 'இல்லம் தேடி' கல்வி திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை, இவ்வாறு, படிக்க இயலும்.
திருப்பூர் மாவட்டத்தில் 1416 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அவரவர் தலைமை ஆசிரியர் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தன்னார்வலர்களை அணுகலாம், '' என்றார்.
'இல்லம் தேடி கல்வி' மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரியிடம் கேட்டபோது, ‛‛இம்மையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் மாலை 5:00 முதல், இரவு 7:00 மணி வரை நடக்கும். சனி, ஞாயிறுகளில் விடுமுறை விட்டால், வார நாட்களில் கூடுதலாக வகுப்பு நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் விடுமுறை என்பதால் பகல் வேளையிலும் வகுப்புகள் நடத்திக்கொள்ள தன்னார்வலர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை தவிர்க்க இம்மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.
10 - பிளஸ் 2 மாணவருக்கு கற்றுத்தரலாம்'
'ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே 'இல்லம் தேடி கல்வி' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பத்து முதல் பிளஸ் 2 வரை பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் தங்களையும் இணைத்துக்கொண்டால், படிக்க நேரம் ஒதுக்குவதுடன், சந்தேகங்களை வகுப்பு, பாட ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளவும், தேர்வுக்கு தயாராகவும் உபயோகமாக இருக்கும்'' என்கின்றனர் பொதுத்தேர்வு மாணவர்கள்.
ஆர்வம் அதிகரித்தால் மையங்கள் உயரும்