திருப்பூர் : ''பஞ்சு விலையை குறைக்ககோரி, பின்னலாடை துறையினருடன் இணைந்து நுாற்பாலை துறையினரும் குரல் கொடுக்கவேண்டும்'' என்று, 'டீமா' தலைவர் முத்துரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.
ஜவுளித்துறை பிரதான மூலப்பொருளான பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதை பின்பற்றி, தமிழக நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை மாதம் தோறும் உயர்த்திவருகின்றன. கடந்த நவம்பரில் கிலோவுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.டிசம்பரில் 10 ரூபாய் குறைக்கப்பட்டது. இம்மாதம் மீண்டும், கிலோவுக்கு 30 ரூபாய் நுால் விலை உயர்த்தப்பட்டது.
தொடரும் நுால் விலை உயர்வு, திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.நுால் விலை உயர்வுக்கு காரணமான பஞ்சு விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என, திருப்பூர் தொழில் அமைப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்புகின்றனர்.
உற்பத்தி நிறுத்த போராட்டமும் நடத்தியுள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்து ரத்தினம் கூறியதாவது:பஞ்சு விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பஞ்சு விலைக்கு ஏற்ப, நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்திவிடுகின்றன.
வர்த்தக போட்டிகளால், நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, பின்னலாடை நிறுவனங்களால், ஆடை விலையை உயர்த்த முடியாது.நுால் விலை உயர்வால், ஆர்டர்கள் கைநழுவி போட்டி நாடுகளை நோக்கி நகரும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால், நுாற்பாலைகள், ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், ஜாப்ஒர்க் என ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி சங்கிலித்தொடர் நிறுவனங்களும் பாதிக்கப்படும். தொழிலாளர்களும் வேலை இழப்பர்.பஞ்சு விலையை கட்டுப்படுத்த கோரி, பின்னலாடை உற்பத்தி துறையினர் மட்டுமே போராட்டங்கள் நடத்திவருகிறோம்.
பஞ்சை நேரடியாக பயன்படுத்தும் நுாற்பாலை துறையினரோ, அமைதிகாக்கின்றனர். இது, மிகுந்த வேதனை அளிக்கிறது. பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப, நுால் விலையை உயர்த்திவிடலாம் என்கிற எண்ணத்தை நுாற்பாலை துறையினர் கைவிடவேண்டும்.பின்னலாடை துறையினருடன் இணைந்து, நுாற்பாலை சங்கத்தினரும், பஞ்சு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். ஜவுளித்துறையினர் ஒன்றுபட்டு போராடினால், நிச்சயம் வெற்றிபெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.