கோவை : கலெக்டர் அலுவலகத்தில் கிடந்த பாம்பு சட்டையால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலக மைய கட்டடத்தின் பின் பகுதியில், கருவூல மையம் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 5 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, கருவூல மைய ஊழியர்கள் நேற்று காலை வேலைக்கு வந்தனர்.அப்போது கருவூல மைய பாதுகாப்பு அறையின் அருகே, பாம்பு ஒன்று சென்றதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்து, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பாதுகாப்பு அறை உட்பட கருவூல மைய அலுவலகம் முழுவதும் தேடி பார்த்தனர். பாம்பு சிக்கவில்லை. பாம்பின் சட்டை மட்டும் இருந்தது. பாம்பு தென்படாததால் கருவூல ஊழியர்கள், நேற்று ஒருவித அச்சத்திலேயே பணியாற்றினர்.
பாம்பு சட்டை கிடந்த கருவூல மையத்துக்கு தினமும், நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும் பாம்பு இருந்ததாக சொல்லப்படும் பாதுகாப்பு அறை குப்பை, தூசி படிந்து பாம்பு உள்ளிட்ட ஜந்துகள் வசிப்பிடம் போல் இருந்தது. அந்த அறையை தூய்மைப்படுத்த, தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி சென்றனர்.