கோவை : கோவை மாநகராட்சி தேர்தலுக்கான 'கன்ட்ரோல் ரூம்' தயார்படுத்தவும், பறக்கும் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. அனைத்துக்கட்சியினருடன் ஆலோசனை நடத்திய மாநில தேர்தல் ஆணையம், முதன்மை பயிற்றுனர்களுக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பயிற்சி அளித்தது.அதில், வேட்பு மனு பெறுவது, பரிசீலனை செய்வது, வேட்பாளர்களின் சொத்து பட்டியலை உடனுக்குடன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது, ஓட்டுச்சீட்டு தயார் செய்வது, சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட விபரங்கள் தொடர்பாக, மீண்டும் ஒருமுறை பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின், கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவையில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சமீரன், மாநகராட்சி சார்பில் துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் தேர்தல் பிரிவினர் பங்கேற்றனர்.அப்போது, 'ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடிகள், மிகவும் பதற்றமான சாவடிகளை அடையாளம் கண்டு, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்தல் தொடர்பான புகார்களை பெற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக 'கன்ட்ரோல் ரூம்' உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க, பறக்கும் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அக்குழுக்கள், தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து பணியில் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.