ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் 219 வார்டுகளில் போட்டியிட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்துவது, புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது ஆகிய பணிகளில் மும்மராக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம் நகராட்சிகள் உள்ளன.ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, மண்டபம், கமுதி, அபிராமம், சாயல்குடி, முதுகுளத்துார் ஆகிய 7 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் அபிராமம் மட்டும் தலைவர் பதவி பெண் பொதுப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவைகளில் பொதுவாக உள்ளன.
நான்கு நகராட்சிகளில் 111 வார்டுகள், ஏழு பேரூராட்சிகளில் 108 வார்டுகள்உள்ளன. தேர்தலுக்காக 342 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு நகராட்சிகளிலும் ஆண்கள் 1,01,431, பெண்கள்- 1,04,319, இதரர் என மொத்தம் 2,05,776 வாக்காளர் உள்ளனர். ஏழு பேரூராட்சிகளில் ஆண்கள்- 38,474, பெண்கள்- 39,390, இதர்-1 என 77,865 வாக்காளர்கள் உள்ளனர்.போட்டியிட தயராகும் கட்சியினர்நான்கு நகராட்சிகளும் பொதுப்பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளதால், எப்போது தேதி அறிவித்தாலும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அனைத்துகட்சிகளும் தயராகிவருகின்றன.
அ.தி.மு.க., -தி.மு.க., -பா.ஜ.,- காங்., உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் பிரமுகர்கள் பலர் போட்டியிட ஏற்கனவே விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். எப்படியாவது 'சீட்' பெறுவதற்காக ஆளுங்கட்சியினர் அமைச்சர், எம்.எல்.ஏ.,களிடமும், அ.தி.மு.க.,வினர் கட்சியில் மூத்த நிர்வாகிகள் சிபாரிகளை நாடியுள்ளனர்.
பா.ஜ., காங்., உள்ளிட்டவை ஏதாவது நகராட்சி தலைவர் பதவி ஒதுக்க வேண்டும், இல்லாவிட்டாலும் பேரூராட்சியாவது தலைவர் பதவிக்காவது போட்டியிட வேண்டும் என கட்சி தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆங்காங்கே ஆலோசனை கூட்டம், கட்சியில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை, மாற்றுக்கட்சியிலிருந்து ஆட்களை இழுப்பது உள்ளிட்ட வேலைகளில் தற்போதே ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் தரப்பினர் ஈடுபட தொடங்கியுள்ளனர்.