ராமநாதபுரம் : , ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பெயரளவில் உள்ளது.
ராமநாதபுரம் வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி மக்கள் பொருட்கள் வாங்கினர். துாய்மை பணியாளர்கள் போதிய முகக்கவசம், கையுறையின்றி பணிபுரிகின்றனர். இதனால் நோய் தடுப்பில் சிக்கல் உள்ளது.இம்மாவட்டத்தில் தினமும் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
கலெக்டர், மருத்துவமனை டாக்டர்கள், போலீசார் என அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நோய் பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது போலீசார், நகராட்சி சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.எனினும் இதனை அலட்சியப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் வாகனங்களிலும், நடந்தும் செல்பவர்கள் முகக்கவசம் அணியாமல் உலா வருகின்றனர்.
குறிப்பாக நேற்று புதன் வாரச்சந்தையில் நுாற்றுக்குமேற்பட்ட கடைகள் வைத்திருந்தனர். சில கடைக்காரர்கள் மற்றும்பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை. சானிடைசர், கிருமிநாசினியும் தெளிக்கப்படவில்லை. இதனால் மேலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.குப்பை அகற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்கவில்லை.
அவர்களுக்கு அதனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாரச்சந்தை, வழக்கமான சந்தை பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்களை கண்காணித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் கொரோனாவின் கோர பிடியில் இருந்து தப்ப முடியும்.--------