ஈரோடு:நிலம் வாங்கித் தருவதாக கூறி, காய்கறி வியாபாரிகளிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அ.தி.மு.க., பகுதி செயலர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பழனிசாமி, செயலர் முருகசேகர், பொருளாளர் வைரவேல், துணை தலைவர் குணசேகரன், துணை செயலர் ஆறுமுகம். அனைவருமே அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். இவர்கள் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம், வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி, 2 கோடி வரை பணம் பெற்று, வீட்டுமனை வழங்காமலும், பணத்தை திருப்பி தராமலும் இருந்ததாக, ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சங்க வியாபாரி அய்யந்துரை புகார் அளித்தார்.
நம்பிக்கை மோசடி, கூட்டு சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க பொருளாளர் வைரவேல், தலைவர் பழனிசாமியின் மகன் வினோத்குமார், துணை செயலர் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், செயலர் முருகசேகர், 59, என்பவரை கைது செய்தனர். இவர் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கருங்கல்பாளையம் பகுதி செயலராக உள்ளார்.இவரிடம் டி.எஸ்.பி., அண்ணாதுரை விசாரணை நடத்தினார். மோசடி விவகாரத்தில், இது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. செயலரிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். முருகசேகரின் மனைவி சாந்தியும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை, குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.