திருப்பூர்:திருப்பூரில், மாணவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமையாசிரியை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கீதா, 45. கடந்த ஆண்டு டிச., 17ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தை, மாணவர்களை சுத்தம் செய்ய சொன்னதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், தலைமையாசிரியை மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அவரை, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், 'சஸ்பெண்ட்' செய்தார். ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார், 35, அளித்த புகாரையடுத்து, தலைமையாசிரியை கீதா மீது மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்ஜாமின்கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், கீதா மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற அறிவுரைப்படி, இதுதொடர்பான மனுவை, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் விசாரித்தார். அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து, தலைமையாசிரியை கீதாவை, மங்கலம் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.