தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, விடுதி அறைகளை சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சலில் பிளஸ் 2 மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலுார் மாவட்டம், வடுகபாளைத்தை சேர்ந்தவர் முருகானந்தம், 47. இவரது 17 வயது மகள், மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த 9ம் தேதி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முருகானந்தம், தன் மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார்.தொடர்ந்து மாணவியின் உடல் நிலை மோசமானதால், 15ம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில், அனைத்து அறைகளையும் துாய்மை செய்ய சொல்லி, வார்டன் கொடுமைப்படுத்தியதால், மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்ததாக மாணவி, டாக்டர்களிடம் கூறினார்.
டாக்டர்கள் அளித்த தகவலின் படி, மாணவியிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், வார்டன்சகாயமேரி, 62 என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி மாணவி உயிர் இழந்தார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.