-தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாத போலீசாரை் கண்டித்து, திருபுவனையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி, திருபுவனை பெரியபேட் வி.டி.சி., வீதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ரவீந்தர், 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (34); மகள் புவனேஸ்வரி (15), மகன் குமாரவேல் (13).கடந்த டிச.31ம் தேதி இரவு குடி போதையில் இருந்த ரவீந்தரின் அண்ணன் மாணிக்கம் (49) என்பவரை, அதே பகுதி கவுரிசங்கர் (25), வினோத் (27), லோகேஸ்வரன் (25) ஆகியோர் தாக்கி உள்ளனர்.தட்டிக்கேட்ட ரவீந்தரையும் சரமாரியாக தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார். தொடர்ந்து, சாலையோரம் கிடந்த பெரிய மர கட்டையை துாக்கி ரவீந்தர் மீது போட்டதில், அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இடுப்பு மற்றும் மர்ம உறுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. திருபுவனை போலீசார், ரவீந்தரிடம் வாக்குமூலம் பெற்று, வழக்குப் பதிந்தனர். படுகாயமடைந்த ரவீந்தர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.தாக்குதலில் ஈடுபட்ட 3 வாலிபர்களும், தங்கள் தாயாருடன் மருத்துவமனையில் ரவீந்தரை சந்தித்து, மன்னித்து விடுமாறு கெஞ்சினர்.இந்த நிலையில், ரவீந்தரின் வலது கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தொடை, இடுப்பு பகுதியில் நரம்புகள் துண்டிக்கப் பட்டதால், அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. கடந்த 4ம் தேதி காலை அவருக்கு வலது காலில் டாக்டர்கள் ஆப்பரேஷன் செய்தனர். அன்று மாலை 4.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி ரவீந்தர் இறந்தார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றப் பட்டது. தாக்கிய மூன்று வாலிபர்களும் தலைமறைவாகினர்.ரவீந்தரின் மனைவி ராஜலட்சுமி, தனது கணவரை அடித்து கொலை செய்த கவுரிசங்கர், வினோத், லோகேஸ்வரன் ஆகியோரை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 4ம் தேதி இரவு புகார் கொடுத்தார். ஆனால் திருபுவனை போலீசார் மூவரையும் கைது செய்யாமல், இரு தரப்பினரையும் அழைத்து, கட்டப் பஞ்சாயத்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், 15 நாட்கள் கடந்தும் கொலையாளிகளை கைது செய்யாத போலீசாரைக் கண்டித்து, ரவீந்தரின் உறவினர்கள் நேற்று காலை 8.00 மணியளவில், திருபுவனை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.கொலையாளிகள் மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று, மறியலை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.