நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சி, பேரூராட்சி சேர்மன் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மனைவியை தேர்தலில் நிறுத்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பல இடங்கள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாவதற்கு முன், பல்வேறு இடங்களில் பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. இதில், தி.மு.க.,வில் ஒரு சில இடங்களில் நேர்காணலும் நடத்தப்பட்டுள்ளது.இதில் நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளான நகர செயலாளர்கள், மற்றும் கிளை நிர்வாகிகள் என பலர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பல இடங்களில் நகராட்சி, பேரூராட்சி சேர்மன் பதவி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் மட்டுமல்லாமல் பொதுவிலும் பெண்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இதனால், சேர்மன் பதவிக்கு போட்டியிட காத்திருந்த ஆண் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சேர்மன் பதவிக்கு போட்டியிட விரும்பிய பிரதான கட்சிகளின் நிர்வாகிகள் பலர், சேர்மன் பதவிக்காக தங்கள் மனைவியை தேர்தல் களத்தில் இறக்கிவிட முடிவு செய்து, அதற்கேற்ப பெண்கள் வார்டுகள் மற்றும் பொது வார்டுகளைத் தேடி வருகின்றனர்.
-நமது நிருபர்-