வடமதுரை : வடமதுரை அருகே இரு குக்கிராமங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனது. தற்போது வேறு பெயரில் ஒரே ஊராக மாறினாலும் இங்கு பல விஷயங்கள் இன்னும் 'இரண்டு'களாக தொடர்கிறது.'ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என கிராமங்களில் சொலவடை உண்டு. ஆனால் வடமதுரை ஆண்டிபட்டியில் அது செல்லுபடியாகாது.
அந்தளவு ஒரு கிராமத்தில் 2 ஊராட்சிகள் இருந்தாலும் ஒற்றுமை குலையாமல் வசிக்கின்றனர் இங்குள்ள மக்கள்.வடமதுரை ஒன்றியத்தின் தென்னம்பட்டி, பிலாத்து ஊராட்சிகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது ஆண்டிபட்டி. நுாறு ஆண்டுகளுக்கு முன் இங்கு கோவில் பாறைப்பட்டி, பரப்பா கவுண்டன்பட்டி என இரு கிராமங்களாக இருந்தன. கால ஓட்டத்தில் இவ்வூர்களின் பெயர் மறைந்து தற்போது ஆண்டிபட்டி என்ற ஒற்றை பெயருடன் உள்ளது. இருந்தாலும் இன்றும் இங்கு நூறு மீட்டருக்குள் இரு காளியம்மன், இரு விநாயகர் கோயில்கள் உள்ளன. தனித்தனியே இரு ஊர் பெரியதனக்காரர்கள் உள்ளனர். அரசு நிர்வாக ரீதியிலும் பிலாத்து, தென்னம்பட்டி என ஊராட்சி பகுதிகளாக இக்கிராமம் பிரிந்துள்ளதால் இரு தலைவர், இரு வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். பள்ளி, நாடகமேடை, சமுதாயக்கூடம், ரேஷன்கடை ஆகியன தலா ஒன்று உள்ளன.ஆண்டிபட்டி ஏ.கருப்பையா கூறியதாவது:
இங்கிருந்த கோவில் பாறைப்பட்டி, பரப்பா கவுண்டன்பட்டி என்ற இரு குக்கிராமங்கள் மறைந்து ஆண்டிபட்டி என்ற ஒரே பெயருடன் தற்போது உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை சுவாமி சாட்டுதல் நடந்து அடுத்த 15வது நாளில் திருவிழா நடக்கும்.இங்கு வசிப்போர் மேற்கு காளியம்மனை அக்காள் எனவும், கிழக்கில் இருக்கும் காளியம்மனை தங்கை எனவும் குறிப்பிட்டு வழிபடுவது வழக்கம். அனைவரும் வழிபாடு என்று கிளம்பினால் 4 கோயில்களுக்கும் செல்வர். இதில் பாகுபாடு கிடையாது.
திருவிழாவும் இரு ஊர் பெரியதனக்காரர்கள் முன்னிலையில் ஒரே கிராம திருவிழாவாகத்தான் பாகுபாடின்றி நடக்கிறது. இரு ஊராட்சி பகுதியில் மக்கள் வசித்தாலும் ஆண்டிபட்டி என்ற ஒன்றை பெயரில் அனைவரும் ஓரணியாக திரண்டு கிராமத்திற்கு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பது எங்கள் வழக்கம்' என்றார்.