நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி, 25 ஆண்டுகளுக்கு பிறகு பொதுப்பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்டதால், பதவியை பிடிக்க ஆளுங்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, 1996ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி மகளிர் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. 2001 தேர்தலிலும் அதே ஒதுக்கீடு தொடர்ந்தது. 2006 தேர்தலில் பொது பிரிவு மகளிருக்கு கிடைத்தது.ஆனால், தி.மு.க., கூட்டணியில் இந்த பதவி வி.சி.,க்கு ஒதுக்கப்பட்டதால், அப்போதும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கெய்க்வாட்பாபு பதவிக்கு வந்தார்.
அடுத்த 2011ல் பொதுப் பிரிவினருக்கு இருக்க வேண்டிய பதவி மீண்டும் தாழ்த்தப்பட்டோர் வசமே இருந்தது.தற்போது நகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி 25 ஆண்டுகளுக்கு பிறகு பொதுப்பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த அ.தி.மு.க., - தி.மு.க.,- காங்., - வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சேர்மன் பதவியை பிடிக்க களத்தில் குதித்துள்ளனர்.குறிப்பாக, ஆளும் தி.மு.க., வினர் அதற்காக தற்போதே களமிறங்கி போட்டி போட்டு வேலையை துவக்கி விட்டனர். தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார் ஆகியோர், முதற்கட்டமாக தங்களது ஆதரவாளர்களுடன் மாவட்ட செயலாளர் கணேசனை மாறிமாறி சந்தித்து, தங்களின் மனைவியருக்கு சேர்மன் சீட் ஒதுக்க வலியுறுத்தி வருகின்றனர்.அத்துடன், தங்களது ஆதரவாளர்களை அதிகளவு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற முயற்சியையும் துவக்கி விட்டனர். ஆனால், தமிழகத்திலேயே நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கின்றனர்.
எனவே, தி.மு.க., கூட்டணியில் சேர்மன் பதவி வி.சி.,க்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், அக்கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் புலிக்கொடியான் தொடர்ந்து கட்சி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.நெல்லிக்குப்பம் நகராட்சியை பொறுத்தவரையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் பொதுப்பிரிவுக்கு சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடையே பதவியை பிடிக்க கடுமையான போட்டி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, போட்டி போட்டு பணியை துவக்கி விட்டனர்.