செங்குன்றம---வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக உள்ளதால், கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய ஓட்டல், மளிகை கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடையின்றி அதிகரித்து உள்ளது. விற்பனையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் அவை எளிதாக இருந்தாலும், நிலத்தடி நீர் சேமிப்பு, இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது.கடந்த ஆட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் கடந்த மாதம், 'மஞ்சப்பை' என்ற துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை அரசு செயல்படுத்தியது. ஆனாலும், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறைந்ததாகத் தெரியவில்லை.சென்னை செங்குன்றம், புழல், மாதவரம், அம்பத்துார், ஆவடி, திருவேற்காடு சுற்றுவட்டாரங்களில் தினமும், பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும், 100 டன் வரை வெளியேற்றப்படுகின்றன.இவை அனைத்தும் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுவதில்லை. குப்பைத் தொட்டி, காலி மைதானம், நீர்நிலைகளின் கரைகள் ஆகியவற்றில் குவிக்கப்படுகின்றன.இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சில இடங்களில், விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை மண்டலத்தால், 'டையாக்சின்' எனப்படும் வாயு வெளியாகி, மனிதர்களின் உடல் நலத்தை பாதிக்கிறது. பல இடங்களில் பசு, எருமை மாடுகள், குப்பையில் உள்ள உணவுக் கழிவுகளுடன், பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உண்டு விடுகின்றன. அதனால் தொண்டை, வயிற்றில் அடைப்பு ஏற்பட்டு, உணவை ஜீரணிக்க முடியாமல், மூச்சுத் திணறி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.கால்நடை, இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து, பிளாஸ்டிக் பைகளின் விற்பனையை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.