சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, வால்டாக்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயில் வழியாக நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், மேற்குபக்கம் வாயில் வழியாக வெளியே செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரயில்களில் பயணியர் வருகை அதிகரித்துள்ளதால், நிலையம் முன்புறம் உள்ள, ப்ரீபெய்டு ஆட்டோக்களில் செல்வதற்கு, வரிசையில் பயணியர் காத்திருந்து, 'டோக்கன்' வாங்கி பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், பூந்தமல்லி சாலையில் செல்லும் ஆட்டோக்களில், செல்வதற்கு முயல்கின்றனர்.ஆட்டோக்காரர்கள், சென்ட்ரல் நிலையம் எதிரில், பூந்தமல்லி சாலையில் இருந்து, வால்டாக்ஸ் சாலையில் சென்ட்ரல் நுழைவு வாயில் வரையிலும், முழுதுமாக சாலையில் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். கூடுதல் கட்டணம் கேட்பதாலும் பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையால், பூந்தமல்லி சாலையில் வரும் வாகனங்கள், வால்டாக்ஸ் சாலையில் செல்வதற்கு நெருக்கடியில், கடந்து செல்ல வேண்டிஉள்ளது.சாலை முழுதையும் மறைத்தபடி ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள், பயணியர் சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது. பூந்தமல்லி சாலையில், வால்டாக்ஸ் சாலை இணையும் இடத்திற்கு அருகில் தான், போக்குவரத்து போலீஸ் உதவி மையம் உள்ளது.சாலையில் வாகன நெருக்கடியை குறைக்கவும், நிலையத்திலிருந்து, வெளியேறும் பயணியர் சாலையை சிரமமின்றி கடந்து செல்வதற்கும் ஏதுவாக, ஆட்டோக்காரர்களை போலீசார் அவ்வப்போது அப்புறப்படுத்தினால், உதவியாக இருக்கும்